சனி, 22 செப்டம்பர், 2012
பிக்ஹ் அல் அவ்லவியாவும் ஹஜ் கடமையும்
அஷ் ஷெய்க்
எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) ஹஜ் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று. முஸ்லிமான பருவமெய்திய சித்த”வாதீனமுள்ள அடிமையல்லாத, சக்தி படைத்த அனைவர் மீதும் வாழ்நாளில் ஒரு தடவை ஹஜ் செய்வது கடமையாகிறது. அதற்கு மேலதிகமாக செய்யப்படும் அனைத்து ஹஜ்ஜும் ஸுன்னத்தாகவே நிறைவேறும். நேர்ச்சைக்குரிய ஹஜ் ஆயின் வாஜிபாகிறது. உரிய விதத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றி நாடு திரும்புவோர் அன்று பிறந்த பாலகனைப் போல் பாவங்கள் மன்னிக்கப்பட்டு திரும்பி வருகின்றார்கள். உரிய முறையில் நிறைவேற்றப்படும் ஹஜ்ஜுக்கு சுவர்க்கமே கூலியாகும். ஹஜ்ஜின் மகிமை பற்றி அல் குர்ஆனும் அல் ஹதீஸும் வலியுறுத்திக் கூறியுள்ளன. எனவே வருடாந்தம் லட்சோபலட்சம் மக்கள் புனித மக்காவை நோக்கி பயணித்து ஹஜ்ஜை நிறைவேற்றி ஆன்மிக பரிபக்குவத்தைப் பெற முயற்சிக்கிறார்கள். துல்ஹஜ் மாதத்தில் மட்டுமின்றி வருடத்தின் ஏனைய மாதங்களிலும் குறிப்பாக ரமழானிலும் உம்ராவுக்குச் செல்வோரின் தொகை முன்னெப்போதையும்விட அதிகரித்து வருவதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. ஆனால் ஹஜ் செய்வதற்கான வசதி படைத்தவர்கள் மீது ஹஜ் ஆயுளில் ஒரு தடவை மாத்திரமே கடமையாக இருக்க, வருடாந்தம் ஹஜ் செய்பவர்களின் தொகை அதிகரிக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது. முதல் தடவையாக ஹஜ் செய்வோர் மொத்த ஹஜ்ஜாஜிகளில் 15 வீதம் மாத்திரமே என்று கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி குறிப்பிடுகின்றார். இரண்டு மில்லியன் (இருபது இலட்சம்) ஹஜ்ஜாஜிகளில் மூன்று இலட்சம் பேர் மாத்திரமே முதல் தடவையாக ஹஜ் செய்கின்றனர் என்பது அவரது கணிப்பீடாகும். அப்படியாயின் பதினேழு இலட்சம் பேர் இரண்டாவது தடவையாக அல்லது 10 ஆவது 30 ஆவது தடவையாக ஹஜ் செய்கின்றனர். சிலர் தொடர்ந்து 40 ஆவது தடவையாக ஹஜ்ஜுக்குச் செல்கின்றனர். வருடாந்தம் ஹஜ்ஜுக்கும் ரமழானில் உம்ராவுக்கும் செல்வோர் பலர் இருக்கின்றனர். தாம் மாத்திரம் செல்லாது தம்முடன் இன்னும் பலரையும் தமது செல்வத்தில் அழைத்துச் செல்லும் செல்வந்தர்களும் உலகில் இல்லாமலில்லை. ஒரு தடவை கட்டார் நாட்டிலிருந்து வருடாந்தம் ஹஜ் செய்யும் ஒரு குழுவைச் சந்தித்த கலாநிதி கர்ளாவி அவர்கள் பின்வருமாறு கேட்டார்கள். “இந்தோனேசியாவில் முஸ்லிம்களை மத மாற்றம் செய்ய கிறிஸ்தவ மிஷனரிகள் பாரிய திட்டத்தை தீட்டி செயற்பட்டு வருகின்றன. எனவே முஸ்லிம்களைப் பாதுகாக்க தரமான இஸ்லாமிய ஸ்தாபனங்களும் உருவாக்கப்பட வேண்டும். கல்வி, மருத்துவம் சமூக சேவைகளிலும் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு முஸ்லிம்களை மதமாற்றி வருவதால் முஸ்லிம் சமூகத்திலும் இஸ்லாமிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டால்தான் இஸ்லாம் பாதுகாக்கப்படும். எனவே இவ்வருடம் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்லாது அதற்குச் செலவாகும் பணத்தை கிறிஸ்தவப் பிரசாரத்திலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குச் செலவிடுங்கள்” என்று கூற, அவர்கள் துல்ஹஜ் மாதமாகிவிட்டால் ஹஜ் செய்ய வேண்டுமென்ற வேட்கை உருவாகி விடுகிறது. எமது ஆத்மாக்கள் மக்காவில் சிறகடிப்பது போன்ற உணர்வை நாம் பெறுகின்றோம். அங்கு சென்றால்தான் பெரு நிம்மதி ஏற்படுகின்றது’ என்று கூறினர். இவர்கள் இத்தகைய பாரிய பணத் தொகையைச் செலவு செய்து ஆன்மிக நிம்மதி கண்டு வாழும் அதேவேளை முஸ்லிம் சமூகத்தில் எத்தனையோ கோடி மக்கள் பசி, பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். பல குழந்தைகள் கவனிப்பாரற்ற அநாதைகளாகவே வானமே கூரையாக தரையே விரிப்பாக நிச்சயமற்ற எதிர்காலத்தினை நோக்கிக் கை நீட்டுகின்றனர். திணிக்கப்பட்ட கோர யுத்தங்களுக்கு பல இலட்சம் முஸ்லிம்கள் பலியாகி சொந்த வாழிடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக அல்லல்படுகின்றனர். கோடிக் கணக்கான நோயாளிகள் ஒரு சிறிய மருத்துவ உதவி கூட இல்லாமல் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அறியாமை, மூட நம்பிக்கை, வேலையின்மை போன்றவற்றாலும் பல பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் உம்மத்தின் இன்றைய சூழலில் ஸுன்னத்தான ஹஜ் செய்து ஆத்மானந்தம் பெறுவதை அல்லாஹ் விரும்புவானா? அவ்ரத்தை மறைக்கும் தேவை இருக்கையில் அது பற்றிக் கரிசனை எடுக்காது தலையில் தொப்பியணிய ஆசைப்படுவது முறையல்ல. மஸ்ஜிதுல் அக்ஸாவை கபளீகரம் செய்து காட்டு தர்பார் நடத்தும் யூதர்களை எதிர்த்துப் போராட, மியன்மாரில், ஈராக்கில், ஆப்கானில் கொல்லப்பட, உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் தமக்காக வாய்திறக்க மாட்டார்களா என ஏங்கும் முஸ்லிம்களுக்கு உதவ பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இடம்பெறும் கிறிஸ்தவ சிந்தனை படையெடுப்பை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது. தஃவா நிலையங்களை அமைத்து தாஈகளை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. இஸ்லாமிய வெளியீடுகளை செய்யப் பதிப்பகங்களை அமைக்க வேண்டியுள்ளது என்று இத்தகைய ஹாஜிகளிடம் யாராவது கூறினால் அதை அவர்கள் தூசுக்கும் மதிப்பதில்லை. ஆனால் சிந்தனா, கலாசார படையெடுப்புக்கு எதிராக போராடுவது ஹஜ் கிரியை விடவும் சிறந்தது என அல்குர்ஆன் கூறுகிறது. ஹாஜிகளுக்கு தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாவை நிர்வகிப்போரையும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட அவனது பாதையில் அறப்போர் செய்தவர்களுக்கு சமமாக்கி விட்டீர்களா? அல்லாஹ்விடத்தில் இவ்விருவரும் சமமாக மாட்டார்கள். (அத் தௌபா 19,20) இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார். கடைசிக் காலத்தில் காரணமின்றி ஹஜ்ஜாஜிகளது தொகை அதிகரிக்கும். அவர்களுக்கு ஹஜ்ஜுப் பயணம் மிக இலகுவாக இருக்கும், ஜீவனோபாயம் தாராளமாக இருக்கும். ஆனால் ஹஜ்ஜில் மீளும் போது அவர்கள் எதனையும் கொண்டுவர மாட்டார்கள். ஆனால் அவர்களது பக்கத்து வீட்டானோ கைதியாக இருப்பான். எந்த ஹாஜியும் அவனுக்கு உதவி செய்து அவனை சந்தோசப்படுத்தவும் மாட்டான்’ என்றார். ஒரு தடவை பிஸ்ர் இப்னு ஹாரித் அவர்களிடம் வந்த ஒருவர் தான் ஹஜ் செய்ய நாடி இருப்பதாகவும் தனக்கு உபதேசிக்கும் படியும் வேண்டிக் கொண்டார். அதற்கு பிஸ்ர் அவர்கள் உம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார்கள். அதற்கு அவர் இரண்டாயிரம் என்று கூறவே உனது ஹஜ்ஜின் மூலம் எதனை அடைய நாடுகிறீர்கள் என பிஸ்ர் வினவினார். அதற்கு அவர் உலகப் பற்றற்ற மனோ நிலை அல்லது கஃபாவின் மீதான வேட்கை அல்லது அல்லாஹ்வின் திருப்பொருத்தம்’ என்று பதிலளித்தார். அதற்கு பிஸ்ர் நீர் உமது வீட்டில் இருந்து கொண்டே இரண்டாயிரம் திர்ஹங்களை செலவழித்து அல்லாஹ்வின் திருப்தியைப் பெற வழிவகை காட்டவா? என்றார். அதற்கு அவர் ஆம் என்று கூறவே நீர் தற்போது போய் இந்த இரண்டாயிரம் திர்ஹம்களை பத்துப் பேருக்கு பங்கீடு செய்வீராக! ‘கடனை அடைப்பதற்காக கடனாளிக்கு கொடுப்பாயாக. ஓர் ஏழைக்குக் கொடு. அவன் தனது இழந்த செழுமையை மீண்டும் பெறட்டும். குடும்ப ஏழ்மையைப் போக்க ஒரு குடும்பஸ்தனுக்கு வழங்குவாயாக. ஓர் அநாதையை பராமரிக்கும் ஒருவருக்கு நீர் கொடு. அநாதை அதனால் பயனடைந்து மகிழ்ச்சியடையக் கூடும். இந்த பணத் தொகை அனைத்தையும் ஒரு நபருக்கு உன்னால் கொடுக்க முடியுமாயின் அவ்வாறு செய். ஏனெனில் ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் உன்னால் சந்தோசத்தை தோற்றுவிக்க முடியுமாயின் ஒருவனது துக்கத்தை போக்க முடியுமாயின் துயரத்தை விரட்ட முடியுமாயின் பலவீனனுக்கு கைகொடுத்து உதவ முடியுமாயின் முதல் தடவையாக செய்யப்பட்ட ஹஜ்ஜுக்குப் பிறகு செய்யப்படும் நூறு ஹஜ்ஜைவிட சிறந்ததாகும். எனவே எழுந்து சென்று நாம் கூறியது போல அப்பணத்தை செலவு செய்வீராக அல்லது உமது உள்ளத்தில் உள்ள எண்ணம் யாது என்று சொல்? என்றார்கள். அதற்கு அவர் ஹஜ்ஜுப் பயணம் தான் எனது உள்ளத்திற்கு மிகவும் விருப்பமாக இருக்கிறது’ என்றார். இதனை கேட்டு புன்னகை பூத்த பிஸ்ர் அவர்கள் செல்வமானது அழுக்கான (ஹராமான) வியாபாரம் மூலம் அல்லது சந்தேகத்திற்கிடமான வழிகள் மூலம் திரட்டப்படுமானால் அச் செல்வங்கள் மனோ இச்சைப்படியே செலவழிக்க வேண்டும் என்றுதான் உள்ளம் விரும்பும்’ என்று இறுதியாக கூறினார். இன்று மாத்திரமின்றி வரலாற்றில் இத்தகைய மனிதர்கள் பலர் இருந்துள்ளனர் என்பதையே இச் சம்பவம் காட்டுகிறது. மார்க்கம் பற்றிய தெளிவு, எது சுன்னத் எது பர்ளு என்பதை உரிய விதத்தில் உலமாக்கல் உணர்த்தாமல் இருப்பதும் இத்தகைய குளறுபடிகளுக்குக் காரணமாகும். சுன்னத்தான ஹஜ்ஜை நிறைவேற்ற முனைபவர்கள், நவீன காலத்தில் நாஸ்திகதவாதத்திற்கும் ஒழுக்க சீர்கேட்டிற்கும் இவற்றிற்கு துணை போகும் உள்ளார்ந்த வெளிச் சக்திகளுக்கும் எதிரான போராட்டம் இன்றைய காலத்தின் தேவையும் கடமையும் என்பதை மறந்து விடலாகாது. ஒரு சர்ச்சை சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இஸ்லாமிய சிந்தனையாளரும் எழுத்தாளருமான பஹ்மி ஹுவைதி அவர்கள் பர்ளான ஹஜ் செய்வதை விட பொஸ்னியாவை மீட்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று எழுதினார். இவரது கருத்தை வாசித்த பலர் தடுமாறிப் போயினர். கலாநிதி கர்ளாவி அவர்களிடம் இது பற்றி விளக்கம் கோரிய போது அவர் இவ்வாறு பதிலளித்தார். பிக்ஹ் அடிப்படையில் நோக்கும் போது அவர் கூறியது ஒரு வகையில் சரியானதுதான். காரணம் என்னவெனில் காலம் தாழ்த்தி நிறைவேற்ற முடியுமான கடமைகளை விட உடனடியாக நிறை@வற்ற @வண்டிய கடமைகளை முற்படுத்த வேண்டும். அதாவது முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது ஷரீஅத்தால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையாகும். பர்ளான ஹஜ்ஜை காலம் தாழ்த்தியும் நிறைவேற்றலாம் என்பது சில இமாம்களது கருத்தாகும். ஆனால் பட்டினி கடும் குளிர், நோய் என்பவற்றின் அழிவிலிருந்து பொஸ்னியா முஸ்லிம்களை பாதுகாப்பது கட்டாய கடமையாகும். அதனை எவ்வகையிலும் பிற்படுத்த முடியாது. அது காலத்தின் தேவையாகும். ஆனால் மக்காவுக்கு அருகில் உள்ளவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் ஹஜ் செய்வதற்கு அதிக பணச் செலவு ஏற்படமாட்டாது. அவர்கள் முதல் தடவையாக ஹஜ் செய்ததாயின் காலம் தாழ்த்தாமல் அதனை நிறைவேற்ற வேண்டும். முதல் தடவை ஹஜ் செய்வது கடமை என்பதை நாம் மறுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் சுன்னத்தான ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சென்று வருவோர் பற்றியே இங்கு குறிப்பிடுகின்றோம். அவர்கள் இவ்வாறு செய்யாமல் அதற்காக செலவாகும் பணத்தை மார்க்கம் அவசியப்படுத்தும் கருமங்களுக்காக செலவழிக்க வேண்டும். அவர்களின் நல்லெண்ணத்தைப் பொறுத்து சுன்னத்தான ஹஜ்ஜின் கூலியை விட அல்லாஹ் அவருக்கு பன்மடங்கு நன்மைகளைப் கொடுப்பான். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இருவித பலன்கள் கிட்டும். 01. இஸ்லாமிய பிசாரத்திற்காகவும் அந்நிய சதித் திட்டங்களிலிருந்து முஸ்லிம்களை பாதுகாக்கவும் பட்டினிச்சாவு, யுத்த அனர்த்தங்கள், படிப்பறிவீனம், அரசியல் அராஜகங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்காகவும் அப்பணத்தை செலவிட்டால் அது பெரும் ஜிஹாதாக அமையும். 02. ஹஜ் செய்ய வருவோரது தொகையை மட்டுப்படுத்தலாம். தற்போது சனநெருக்கடி அதிகமாக இருப்பதால் முதல் தடவையாக ஹஜ் செய்வோருக்குக் கூட திருப்திகரமாக தமது ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாத நிலை இருக்கிறது. தங்குமிடம் உணவு, போக்குவரத்து வசதிகள் தாராளமாக கிடைத்தால் ஹஜ்ஜின் செலவு குறைய வாய்ப்பிருக்கிறது. இஸ்லாத்தில் எதனை முற்படுத்த வேண்டும் என்பதற்கும் ஒரு பிக்ஹ் இருக்கிறது. இந்த பிக்ஹ் அறிவின்மைதான் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் மீள் உருவாக்கப் பணியில் பல்வேறு தராதரக் குழப்பங்கள் நிலவுவதற்கான அடிப்படைக் காரணமாகும். இஸ்லாம் என்பது ஏவல்களை ஏற்று விலக்கல்களை தவிர்த்து வாழ்வதாகும். இந்த ஏவல்களிலும் வாஜிப், பர்ள், சுன்னத், முபாஹ் போன்ற படித்தரங்கள், இருப்பதைப் போன்று விலக்கல்களில் ஹராம், மக்ரூஹ் போன்ற படித்தரங்கள் இருக்கின்றன. இந்த பிக்ஹை பின்பற்றாததன் விளைவே நமது எழுச்சி மந்த கதியில் செல்வதற்கான காரணமாகும். |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக