
முஸ்லிம் பள்ளிவாசல்களை நாம் எப்போதும் பாதுகாப்போம். இது சத்தியம். இனவாதம் மதவாதம் பேசி சிலர் வாக்குக் கேட்க முயற்சிக்கின்றனர். அதைச் செய்ய வேண்டாம் என எல்லா அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன். இன ரீதியான குறுகிய அரசியல் நோக்கங்கள் இனியும் வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கை கட்டியெழுப்புவோம்.
-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் முஸ்லிம்களுடைய மத உரிமைகளை இல்லாதொழிக்கின்றபோது அரசின் பங்காளிக்கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து அமைதியாகவே இருக்கிறது. அவர்கள் மேடைகளில் பேசுவதால் மட்டும் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. அரசின் பங்காளிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரவுமில்லை. அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுமில்லை.
- ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர்

முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்குத் தேவையான விடயங்களைப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக வெளிநாட்டு இராஜதந்திர பதவிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர் பதவிகளை தனிநபர்களின் நலன்களுக்காக கோரிவருகிறது. பள்ளிவாசல் தாக்குதல்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது. அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருந்து கொண்டு அமைச்சுப் பதவிகளையும் அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தையே விமர்சிப்பதற்கு அக்கட்சிக்கு எந்தவித யோக்கியதையும் கிடையாது.
- சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி

தேர்தலில் வியூகம் வகுக்கத் தெரியாத முஸ்லிம் காங்கிரஸ் பள்ளிகள் உடைக்கப்பட வேண்டும் என கனவு காண்கிறது. சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டிய தேவையுள்ளது. ஒரு சில குழுக்கள் பள்ளி உடைப்புச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதற்கு அரசு பொறுப்பல்ல. முஸ்லிம்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஜனாதிபதி இனக்குரோதத்தை ஏற்படுத்த முனைவாரா?
-அமைச்சர் அதாவுல்லாஹ், தலைவர், தேசிய காங்கிரஸ்

முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எமது கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியும் எம்மைவிடுத்து வேறு யாருடனும் எந்த மாகாண சபையிலும் கூட்டணி ஏற்படுத்தமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. எமது அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டாலும் கடந்த தேர்தல்களில் அவர்கள் எம்முடன் இணைந்திருந்தவர்கள் அல்லர். எனினும் ஏனைய இரு மாகாண சபைகளை விடவும் கிழக்கு மாகாண சபையில் நாம் சற்று பின்னடைவிலேயே இருக்கிறோம்.
-பஷில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

தமிழ் தேசிய அரசியல் இதுவரை காலமும் எந்தப் பதவிகளுக்கும் சோரம்போகாது தனது மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் முஸ்லிம் தேசிய அரசியலில் பதவிகள் இல்லாமல் கட்சியை நடத்த முடியாத அவல நிலையில் உள்ளது. இந் நிலை மாற்றப்பட வேண்டும்.
- நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தலைவர், முஸ்லிம் காங்கிரஸ்

முஸ்லிம் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெறும்பட்சத்தில் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. அதேபோன்று த.தே.கூட்டமைப்பு தனிப் பெரும் கட்சியாக வெற்றியீட்டினால் நாம் ஆட்சியமைப்பதற்கு மு.கா. உதவ முன்வர வேண்டும்.
- இரா.சம்பந்தன் எம்.பி., தலைவர், த.தே.கூட்டமைப்பு

பள்ளிவாசல் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் வீறாப்போடு பேசும் ஹக்கீம் இந்த நாட்டின் உயர்சபையான பாராளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ எந்த சந்தர்ப்பத்திலும் பேசாமல் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டார். இவர் என்ன முகத்துடன் இங்கு வந்து வீராப்புப் பேசுகிறார். இவ்வாறு சமூகத்தைப் பற்றிப் பேச வேண்டிய இடத்தில் பேசாது சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதற்காகவா மறைந்த தலைவர் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார்?
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தலைவர், அ.இ.மு.கா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக