சனி, 22 செப்டம்பர், 2012

கல்முனையை சோகத்துக்குள்ளாக்கிய விபத்து

(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து கவலைப்படாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள்.

அக்கரைப்பற்று-கல்முனை  பிரதான வீதியின் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட தியேட்டரடிக்கும் அல்லிமூல சந்திக்கும் இடையிலுள்ள  பகுதியில்  கடந்த 2012.08.28 செவ்வாக்கிழமை இரவு இவ் விபத்து இடம்பெற்றது. முச்சகர வண்டி ஒன்றும் தனியார் சொகுசு பஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்தது.

கல்முனைக்குடி-14 புதிய வீதியில் இலக்கம் 16 இல் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் கல்முனைக்குடி-05 சாஹிபு வீதியில் வசித்து வந்த 50 வயதுடைய ஆட்டோ சாரதி எம்.இஸ்ஸதீனுமே (மூன்று பிள்ளைகளின் தந்தை) இச் சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தவர்களாவார்கள்.

அன்றைய தினம் இரவு 8.00 மணியளவில் கல்முனையிலிருந்து பாலமுனையை நோக்கி செல்லும் போது 8.15 மணியளவில் அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்குச் செல்வதற்காக கல்முனையை நோக்கி வந்து கொண்டிருந்த சுப்பர் லைன் சோகுசு பஸ் வண்டி இவர்கள் பயணித்த முற்சக்கர வண்டியுடன் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டது.

 பாலமுனை கிராமத்தில் வசிக்கும்  தமது சகோதர் சிறாஜின்  வீட்டிற்கு செல்வதற்காகவே இவர்கள் குடும்பத்தோடு தமது பயணத்தை தொடர்ந்தனர்.

சிறாஜ் குவைத் நாட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். அவருடைய மனைவி நாட்டிற்கு அண்மையில் வருகை தந்து மீண்டும் 2012.8.29 ஆம் திகதி குவைத் நாட்டிற்கு செல்ல இருப்பதால் அவரை குடும்பத்தோடு சென்று சந்தித்துவிட்டு வரும் நோககிலேயே இவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர். 

45 வயதுடைய ஜெமினா, ( இரு பிள்ளைகளின் தா ) கல்முனை பிரதேச செயலகத்தில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிக் கொண்டிருந்த 35 வயதுடைய எம்.எச்.றிஹானா, அவரின் பிள்ளைகளான மூன்று வயதுடைய எச்.அம்ஹர் அஹமட், ஒரு வயதும் மூன்று மாதமுடைய அக்தாஸ் அஹமட் மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்று கொண்டிருந்த 26 வயதுடைய சகோதரி எம்.எச்.இர்பானா ஆகியோரே இவ்வாறு முச்சகர வண்டியில் பயணித்து இறுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களாவர்.

அதே நேரம் றிஹானாவின் கணவரான  சாந்தமருது அல் ஹிலால் வித்தியாலய ஆசிரியரான எம்.எம்.புஹாரி தனது மோட்டார் சைக்கிளில் அவர்களோடு செல்ல தயாராகினார்.

இவ்வாறு நிந்தவுவூர் பிரதான வீதியால் சென்று கொண்டிருக்கும் போது சுப்பர் லைன் சோகுசு பஸ் வண்டி ஒன்று ஏதோ ஒரு வாகனத்தை மோதி விட்டு மிக வேகமாக வருவதை புஹாரி ஆசிரியர் உணர்ந்து கொண்டார். அச்சமயம் இந்த பஸ் வண்டி மோதியது தனது குடும்பத்தவர்கள் பயணித்த முச்சகர வண்டியைத்தான் என்பதை அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

துரதிஷ்டவசமாக விபத்து நடந்த இடத்துக்குச் சென்றபோதுதான் இதில் பாதிக்கப்பட்டது தனது குடும்பத்தவர்கள்தான் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

முச்சகர வண்டியில் பயணித்த 6 பேரில் ஐவர் ஸ்தலத்திலேயே உயிர்நீத்துவிட்டனர்.  ஒரு சிறுவர் மாத்திரம் குற்றுயிராகக் காணப்பட்டார். அவரை நிந்தவூர் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் சென்ற போதிலும் வழியிலேயே அவர் உயிர்நீத்துவிட்டார்.

இந்த விபத்தில் உயிர்நீத்த அனவைரது ஜனாசாக்களும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.ஊரே சோகத்தில் ஆழ்ந்தது.

மறுநாள் ஒரே குடுபத்தைச் சேர்ந்த ஐந்து ஜனாஸாக்களும் கல்முனை நூராணியா தைக்கா மையவாடியிலும், ஆட்டோ சாரதியின் ஜனாஸா கல்முனை  கடற்கரைப் பள்ளி மையவாடியிலும் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் கண்ணீர்மல்க நல்லடக்கம் செயப்பட்டது.
அல்லாஹ் அவர்களின் குடும்பத்தினருக்கு நல்ல ஆறுதலை கொடுப்பதுடன் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக. ஆமீன்.
இதேவேளை பஸ் வண்டியுடன் உடனடியாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பஸ் சாரதி மேலதிக விசாரணைக்காக சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.   சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று நாட்டில் விபத்துக்கள் அளவுக்கதிகமாக இடம்பெற்று வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன. வாகனச் சாரதிகளின் கவனயீனமே இதற்குப் பிரதான காரணமாகும். நிந்தவூரில் ஏற்பட்ட குறித்த விபத்து நமக்கெல்லாம் படிப்பினை தருவதாகும். எனவே வாகனச் சாரதிகள் இதுவிடயத்தில் கவனமாக நடந்து கொள்வது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll