சனி, 22 செப்டம்பர், 2012
முக்கிய திருப்புமுனையில் கிழக்கு!
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நாளை மறுதினம் (08.09.2012) நடைபெற இருக்கின்றது. இத் தேர்தலின் முடிவு இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தினைப் பெறப் போகின்றது. இலங்கையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டுமென்று ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகள் பலவும் கோரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்ற அதே வேளை, இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களையும் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் இலங்கை அரசாங்கம் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியாமலும், ஐ.நா மற்றும் சர்வதேசத்தின் அழுத்தங்களை தட்டிக் கழிக்க முடியாமலும் இருக்கின்றது. மேலும், பெரும்பான்மைச் சமூகத்தினரையும் அரசாங்கத்தில் உள்ள பௌத்த கடும் போக்காளர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகையதொரு திரிசங்கு நிலையில் இருந்து கொண்டிருக்கும் அரசாங்கம், இவற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காகவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தை விடவும் முன் கூட்டியே அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற கனவில்தான் அரசாங்கம் தேர்தலை அறிவித்ததென்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்துடன் உள்ள மு.காவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி நிச்சயம் என்ற நிலை இருந்த போதிலும், மு.கா தனித்துப் போட்டியிடுவதற்கு முடிவு செததனால் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி போட்டித் தன்மையுடையதாக மாறியுள்ளது. புலனாய்வுத் துறையினரின் தகவல்களுக்கமைய கிழக்கு தேர்தலில் அரசாங்கம் மூன்றாவது இடத்திலேயே வெற்றி பெறும் எனத் தெரிய வந்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
தற்போது கிழக்கு மாகாண சபையின் தேர்தல் மும்முனைப் போட்டியாகவே உள்ளன. ஐ.ம.சு.விற்கும், மு.காவிற்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையேதான் இந்தப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஐ.தே.கவின் செல்வாக்கு கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் ஒன்றாக இருப்பதற்கான தோற்றப்பாடு காணப்படாத போதிலும், அக்கட்சிக்கான செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஐ.ம.சு.முன்னணி வெற்றி பெற வேண்டுமாயின் சிறுபான்மை மக்களின் வாக்குகள் அவசியமாகும். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ். முஸ்லிம் மக்களின் வாக்குகள்தான் ஐ.ம.சு.வின் வெற்றியை உறுதி செதது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், சிவநேசத்துரை சந்திரக்காந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய சிறுபான்மையின கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் காரணமாகத்தான் ஐ.ம.சு.மு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றியது.
ஐ.ம.சு.முன்னணி 2008 ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்ட சிறுபான்மையினரின் வாக்குகளைப் போன்று இம்முறையும் பெற்றுக் கொள்ள முடியாது. அன்றைய தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டிருக்கவில்லை. இதனால். தமிழ் மக்களின் வாக்குகளை ஐ.ம.சு.முவினால் பெற்றுக் கொள்ள முடிந்தது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இத் தேர்தலில் போட்டியிடுவதனால் தமிழ் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் என்பதனை ஒரு மிகையான கூற்றாக கருத முடியாது. ஏனெனில், கிழக்கு மாகாணத்தில் இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் த.தே.கூட்டமைப்பே அதிகமான தமிழர் பிரதேச உள்ளூராட்சி சபைகளினை கைப்பற்றிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதலால், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கூடுதலான தமிழ் பிரதிநிதிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
என்ற போதிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் நிலவுகின்ற போதிலும் அது முடியாத காரியமாகும்.
அதே போன்று, ஐ.ம.சு.முன்னணியாயினும், மு.காவாயினும் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்துக் கொள்வதென்பது சாத்தியமற்றதாகவே இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையின் ஆட்சி என்பது மு.காவின் தயவில்தான் அமையும் என்பதே அரசியல் அவதானிகளின் ஏகோபித்த கருத்தாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களின் வாக்குகள் ஐ.ம.சு.முவிற்கும், ஐ.தே.கவுக்கும் இரண்டாகப் பிரிந்து செல்கின்றன. தமிழர்களின் வாக்குகள் பெரும்பான்மையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குச் செல்லும் என்று எதிர் பார்க்கின்ற அதே வேளை, முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே.க.வுக்கும், ஐ.ம.சு.மு.வுக்கும், மு.காவிற்கும் சுயேட்சைக்குழுக்களுக்கும் என நான்கு கூறாகப் பிரிவதற்கான வாப்புக்கள் காணப்படுகின்றன. ஆயினும், மு.காவிற்குத்தான் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்குமென்றும் எதிர்வு கூறப்படுகின்றது.
இம்மாவட்டத்தில் ஐ.ம.சு.முக்கும், முகாவிற்கும், த.தே.கூவிற்கும் இடையேதான் பலத்த போட்டிகள் காணப்படுகின்றன. முஸ்லிம்களின் வாக்குகள் எல்லாக் கட்சிகளுக்கும் சிதறடிக்கப்படுமாயின் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விடும் என்ற ஆபத்து இருக்கின்றது. மு.காவும், த.தே.கூ.வும் தலா மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான எதிர்பார்ப்பில் இருந்து கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தை அவதானிக்கும் போது அங்கு, த.தே.கூ அதிகப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளும். இக்கட்சிதான் மாவட்ட வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஏனைய இரு மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா. பின்தங்கியே நிற்கிறது.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் ஐ.ம.சு.முவுக்கும், மு.காவிற்கும் இடையேதான் பலத்த போட்டிகள் நிலவுகின்றன. முஸ்லிம் பிரதேசங்களில் மு.காவிற்குத்தான் செல்வாக்கு அதிகம் உள்ளது. பள்ளிவாசல்களின் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சாரங்களின் போது அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளன. இதனால், கடந்த 2008ஆம் ஆண்டை விடவும் இத்தேர்தலில் மு.காவிற்கு கணிசமான வாக்குகள் அதிகமாக கிடைக்கும் என்று கருதப்படுகின்றது.
என்றபோதிலும், மு.கா அம்பாறை மாவட்டத்தினை வெற்றிகொள்ளுமா என்பதை முஸ்லிம் மக்கள் ஐ.மு.சு.முவுக்கு அளிக்கப்போகும் வாக்குகளே தீர்மானிப்பதாக இருக்கும். முஸ்லிம்களின் 30 ஆயிரம் வாக்குகள் ஐ.ம.சு.முன்னணிக்கு அளிக்கப்படுமாயின் ஐ.ம.சு.மு.தான் வெற்றி பெறும். மு.கா வெற்றி பெற வேண்டுமாக இருந்தால், ஐ.ம.சு.முன்னணிக்கு அளிக்கப்படும் முஸ்லிம்களின் வாக்குகள் சுமார் 25 ஆயிரத்தை விடவும் குறைவாக இருக்க வேண்டும். அத்தோடு சுமார் 80 ஆயிரம் வாக்குகளை மு.கா பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள், அக்கட்சியில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களை விடவும் கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில், அப்பட்டியலில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்கள் ஏழு பேரில் ஒருவரை தவிர்த்துவிட்டு ஆறு பேரை வெற்றி பெறச் செயும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அம்பாறைத் தொகுதியை இரண்டு வலயங்களாகப் பிரித்து தலா மூன்று வேட்பாளர்களை வாக்காளர்களுக்கு அடையாளப்படுத்தியுள்ளார்கள். ஐ.ம.சு.மு சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என்று எதிர் பார்க்கப்படுகின்ற சூழ்நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தலா 20 ஆயிரத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்கள். ஆதலால், ஐ.ம.சு.முவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
இத்தேர்தல் முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கை எடை போட்டுக் கொள்வதற்கான ஒரு தேர்தலாகவும் இருக்கின்றது. தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இன்றைய அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள். இதனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின், மீண்டும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் அக்கட்சிகள் தமது செல்வாக்கை நிரூபிக்கத் தவறும் போது அரசாங்கம் மு.கா.விற்கு அதிக அந்தஸ்தை வழங்கும் என்ற ஒரு அரசியல் நகர்வும் தேர்தலின் பின்னர் இருக்கினறது.
ஐ.ம.சு.மு தனித்து ஆட்சி அமைக்கும் நிலை இல்லாத வகையில் தேர்தல் களம் அமைந்து காணப்படுவதனால், மு.காவின் ஆதரவோடுதான் ஆட்சியை அமைத்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
மு.கா அரசாங்கத்தோடு இணைந்து ஆட்சி அமைத்துக் கொள்வதற்கு மறுதலிக்குமாயின் அல்லது உயர்ந்தபட்ச பேரத்தினை பேசுமாயின் அரசாங்கம் மு.காவில் உள்ள ஒரு சில உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு இழுத்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற ஒரு அபிப்பிராயமும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த அச்சத்தினால்தான் தமது கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரிடம் ஆளுந் தரப்பினர் இப்போதே பேச்சுக்களில் ஈடுபட்டு தயார் நிலையில் வைத்தி இருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் தேர்தல் பிரச்சார மேடைகளில் தெரிவித்து வருகிறார். அவர்கள் யாரென்று தலைமைக்கு தெரியாமலும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். இதனைக் கருத்தில் கொண்டுதான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் மு.காவின் வேட்பாளர்களிடம் ‘பைஅத்’ செது கட்சியின் முடிவுகளுக்கு ஏற்ப கட்டுப்பட்டுச் செயற்படுவோமென்ற சத்தியத்தைப் உலமாக்கள் மூலமாக ரவூப் ஹக்கிம் பெற்றுள்ளார்.
தேர்தலின் பின்னர் மு.கா அரசாங்கத்துடன்தான் இணைந்து கொள்ளும் என்று பரவலாக நம்பப்படுகின்ற போதிலும், தேர்தலில் கிடைக்கும் வெற்றியைப் பயன்டுத்தி அரசாங்கத்துடன் பேரம் பேசும் நிலையினை அதிகரித்துக் கொள்வதற்கே ரவூப் ஹக்கீம் எண்ணம் கொண்டுள்ளார். இதற்கு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் வழக்கம் போல் பதவிகளுக்காக ஓடி விடக் கூடாதென்பது அவசியமாகும். இதற்காகவே ரவூப் ஹக்கீம் பைஅத் எனும் வழிமுறையை கையாண்டுள்ளார்.
இதேவேளை இத்தேர்தல் இனரீதியான தேர்தலாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது வெற்றியை தமிழர்களின் வெற்றியாகவும், மு.கா தமது வெற்றியை முஸ்லிம்களின் வெற்றியாகவும் காட்டுவதற்கு பிரச்சாரம் செது கொண்டிருக்கின்றன.
இதேவேளை, கிழக்கில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. வன்முறைகளில் ஈடுபடாதிருப்பதே சிறந்ததாகும். தேர்தல் முடிந்ததும் அரசியல்வாதிகள் உறவாடிக் கொள்வார்கள். அரசியலில் நிரந்தர பகையில்லை என்று கருத்துக்களை முன் வைப்பார்கள். யாருக்காக சண்டை பிடித்துக் கொண்டோமோ அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். இதனை வாக்காளர்கள் உணர்ந்து செயற்படல் வேண்டும்.
மேலும், எந்தக் கட்சிக்கு வாக்களித்தால் சமூகத்திற்கு நன்மை கிட்டும் என்பதனை தீர்மானித்தல் செதல் வேண்டும். அத்தோடு, யாரை வெற்றி பெறச் செய வேண்டும் என்பதும் முக்கியமாகும். பணம் தந்தார், பொருள் தந்தார், பார்சல் தந்தார், உறவுக்காரர், தமக்கு விருப்பமான கட்சி என்று எதனையும் கருத்தில் கொள்ளாது நல்ல வேட்பாளரை வெற்றி பெறச் செய வேண்டும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவினைப் பயன்படுத்தி தமது ஏகாதிபத்தியத்தை இலங்கையில் நிலை நிறுத்திக் கொள்வதற்கு இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது. இந்தியாவின் ஒரு அதிரடி நடவடிக்கையே மு.கா தனித்துப் போட்டியிடுவதற்கு முக்கிய காரணமாகும். ஐ.ம.சு.மு வெற்றி பெற்றால் மக்கள் அரசாங்கத்தோடுதான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பிரச்சினைகளில்லை. புலி ஆதரவாளர்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகிவிடும்.
அரசாங்கம் தனித்து ஆட்சியை அமைத்துக் கொள்ளாத போது அரசியல் தீர்வினை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்தத் தொடங்கும். ஆதலால் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பல வகையிலும் முக்கியத்துவம் பெற்றதொன்றாக விளங்குகிறது.
வாக்காளர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்தல் வேண்டும். எவரும் வாக்களிக்காதிருக்கக் கூடாது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கி நகர்த்தக் கூடியதொரு தேர்தலாக இருப்பதனால், வாக்களிப்புத்தான் அத் தீர்வினைப் பெற்றுத் தரும் ஆயுதமாக இருக்கப் போகின்றது. இலங்கை அரசாங்கம் தேர்தலின் பின்னர் தீர்வினை முன்வைப்பதற்கு மறுதலிப்பதற்கு முனையுமாயின் உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலைச் செது கொள்ளும் நிலையையும் தோற்றுவிக்கலாம். அவ்வாறான நிலையில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இன ரீதியானதாகவே இருக்கும். பௌத்த தேசியவாதத்தையும், சிங்கள பெரும்பான்மையினரின் தேசிய வாதத்தையும் வலியுறுத்தி தேசிய இயக்கம், ஹெல உறுமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் பிரசாரங்களை மேற்கொள்ளும் நிலையும் உருவாகும்.
ஆகவே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மற்றுமொரு திருப்பு முனையாகவே அமைய இருக்கின்றதென்பது கவனத்திற்குரியதாகும்.
வாக்காளர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்தல் வேண்டும். எவரும் வாக்களிக்காது இருக்கக் கூடாது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கி நகர்த்தக் கூடியதொரு தேர்தலாக இருப்பதனால், வாக்களிப்புத்தான் அத்தீர்வினை பெற்றுத் தரும் ஆயுதமாக இருக்கப் போகின்றது.
|
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக