சனி, 22 செப்டம்பர், 2012
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கான நிரந்தர தீர்வில் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை - சம்பந்தன் எம்.பி.
வடக்கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வருகின்ற போது முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கும், உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அதுவரை வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் மீது திணிக்கமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மருதமுனையில் தெரிவித்தார்.
மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வருகின்றோம். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த இரண்டு சமூகங்களையும் பிரித்து வைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.
ஆகவே முஸ்லிம் - தமிழ் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் செயற்பட்டு இதை முறியடிக்க வேண்டும். இல்லையேல் நாங்கள் பலவிதமான இழப்புக்களை சந்திக்கநேரிடும்.
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இந்த நாட்டிலே சிங்கள சமூகம் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பதை மதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். மதித்தும் வருகின்றோம். எமது உரிமைகளைப்பற்றி நாங்கள் பேசுகின்ற பொழுது அவர்களுக்கெதிராக செயற்படவில்லை.
தமிழ் - முஸ்லிம் மக்கள் சமவுரிமைகளுடன் கௌரவமாக வாழ வேண்டும். எமது சமய கலாசார விடயங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் எமது தனித்துவம் பேணப்பட வேண்டும்.
தந்தை செல்வநாயகம் அரசியல் போராட்டத்தை ஆரம்பித்த போது தமிழ் மக்களுக்காக மாத்திரம் தனது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் மக்களுக்காகவே ஆரம்பித்தார். இதை அவர் மிகவும் தெளிவாக உறுதிப்படக் கூறியிருக்கிறார்.
ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பதாக முஸ்லிம்களுக்கு தமிழர்களால் எந்தவிதமான அசம்பாவிதமும், யாராலும் நடந்ததாக சோல்ல முடியாது. அப்போது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் - முஸ்லிம் மக்கள் மிகவும் அந்நியோன்னியமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிழக்கில் பல இடங்களிலும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் இப்போது யுத்தம் முடிந்து விட்டது. தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். இன ரீதியான பிரச்சினைகள் இப்போது இல்லை. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் மோத வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பொதுப்பிரச்சினைகளாகும். அவற்றை நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.
ஆகவே தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ வேண்டிய தேவை இருக்கின்றது. ஒற்றுமையும் ஒருமித்த குரலும் இருந்தால்தான் எமது உரிமைகளைவென்றெடுக்க முடியும் என்றார்.
|
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக