சனி, 17 நவம்பர், 2012

மடிக் கணனியினால் உயிர் அணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுததுமா?


லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களுக்கும் அதிக நேரம் அடுப்படியில் நிற்கும் ஆண்களுக்கும் உயிரணு பாதிக்கும் என மருத்துவ ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஷாஷயரை சேர்ந்தவர் ஸ்காட்லீட் வயது 30 இவரது மனைவி லாரா. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் நீண்ட நாட்கள் கடந்த பிறகும் லாரா கர்ப்பம் தரிக்கவில்லை. எனவே இருவரும் மருத்துவ ஆய்வு மேற்கொண்டனர். அதில் லாராவுக்கு எந்த குறையும் இல்லை என்பது தெரிய வந்தது.

ஸ்காட்லீட்டுக்கு தான் குறை இருந்தது. அவருடைய உயிரணுவின் வால் பகுதி தலை பகுதியை சுற்றியபடி இருந்தது. இதனால் அந்த உயிரணுவால் நீந்தி சென்று கரு முட்டைக்குள் செல்ல முடியவில்லை. இதனால் தான் கருத்தரிக்கவில்லை என்று தெரிய வந்தது. ஏன் இப்படி ஆனது? என்று டாக்டர்கள் ஆய்வு செய்தனர்.
அவருடைய அன்றாட பழக்க வழக்கங்களை கேட்டனர். அதில் அவர் தினமும் 2 மணி நேரம் லேப்டாப் கம்ப்யூட்டரை தன்மடியில் வைத்து பயன்படுத்துவது தெரிந்தது. அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் தான் உயிரணு பாதிப்பு ஏற்பட்டது. தெரிய வந்தது.அதிக நேரம் அடுப்படியில் நின்று சமையல் செய்யும் ஆண்களுக்கும் இதேபோன்ற பாதிப்பு ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

அழிவிலிருந்து எழுந்த நகரம்


ஜெர்மனி என்ற நாட்டின் பெயர் கூறியவுடன் எவர் நினைவிலும் நிழலாடும் நகரம் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின். நெருப்பில் வீழ்ந்தாலும் உயிர் பிழைக்கக்கூடிய பறவை என்று கற்பனையாகக் கூறும் பீனிக்ஸ் பறவை போல் இரண்டாவது உலகப் பெரும்போரில் குண்டு மழைகளில் நனைந்த நகரம் என்று ஒரு நகரைக் கூறவேண்டுமானால் பெர்லின் நகரைத்தான் கூறவேண்டும்.
அணுகுண்டு மனித உயிர்களுக்கு எவ்வளவு அழிவைப் போருக்குப் பின் ஐம்பது அறுபது ஆண்டுகள் கடந்த பின்னும் அழியாத கோலமாக அவல நிலையை உருவாக்கும் என்பதற்கு வாழும் நினைவு சின்ன நகரங்களில் பெர்லினும் ஒன்று.
பெர்லின் உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. பழமை மட்டுமல்லாது அதன் வரலாற்றில் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு முதலே அதாவது இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னமேயே பெர்லினைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் பதிவாகி இருந்தபோதிலும் அது ஜெர்மனியப் பேரரசின் மாமன்னராக விளங்கிய பிரெடெரிக் வில்லியம் எனும் பேரரசின் ஆட்சிக் காலம் முதலேதான் தலைநகரமாய் விளங்கியது. அதன் பிறகு பெர்லின் நகரம் ஜெர்மன் பேரரசு, வெய்மர் குடியரசு ஆகியவற்றின் தலைநகரமாகவும் விளங்கினாலும் ஹிட்லரின் மூன்றாம் ரெய்ச் என்னும் பெயருடைய நாட்டின் தலைநகராக விளங்கியது.
உலகிலேயே ஒரு பெருஞ்சுவர் வைக்கப்பட்டு இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்ட நகரம் ஜெர்மனிதான். இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பின் ஜெர்மனி மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என்று இரண்டு நாடுகளாயிற்று. இரண்டுக்கும் தலைநகர் பெர்லின். ஒரே நாட்டு மக்கள் 1947 க்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகள் ஆனதுபோல் ஒரே இன மக்கள், அண்ணன் தம்பிகள், அக்காள் தங்கைகள் சுவரினால் பிரிக்கப்பட்டார்கள்.

1996 ஆம் ஆண்டு பிரிந்த இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்த அதிசயம் நிகழ்ந்தது. பெர்லினைக் கிழக்கு, மேற்கு பெர்லினாகப் பிரித்த சுவர் இடிந்தது. ஜெர்மானியக் குடிஅரசின் தலைநகரமாக மீண்டும் ஆயிற்று. பிரித்த சுவரின் கற்கள் இன்று பல வீடுகளில் நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது.
இன்றைய பெர்லின் ஐரோப்பியக் கண்டத்தின் கலை, இலக்கியத்தில் மட்டுமில்லை, பொருளாதாரத்திலும் முதன்மைப் பங்கு வகிக்கிறது. ஜெர்மனி நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது. உலகப் பொருளாதார சந்தையில் அதன் நாடித் துடிப்பு விளங்குகிறது. பெர்லினில் சுமார் நாற்பது இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
உலகின் புகழ்மிக்க நகரங்கள் ஏதேனும் நதிக்கரையில் அமைந்துள்ளது போல் பெர்லினும் ஸ்பிரி எனும் நதியின் கரையில் அமைந்துள்ளது. பழமையும், புதுமையும் இணைந்த ஜெர்மனியில் காணவேண்டிய கலைச் சிறப்புடைய கட்டிடங்கள் நினைவுச் சின்னங்கள் அந்நாட்டின் கலைப் பெருமையையும் வரலாற்றையும் கூறுகின்றன.

குட்டிக் குரங்கு


குரங்குகளைப் பார்த்திருப்பீர்கள் அவற்றின் குட்டிகளையும் பார்த்திருப்பீர்கள். அதனை குட்டிக் குரங்கு என்று அழைப்போம். அது வளர்ந்ததும் பெரிய குரங்காகிவிடும். ஆனால், கடைசி வரை குட்டியாகவே இருக்கும் ஒரு வகை குரங்கு மேற்கு பிரேசில் நாட்டின் கேனோபிஸ் காடுகள், தென் கிழக்கு கொலம்பியா, கிழக்கு ஈக்வடார், கிழக்கு பெரு மற்றும் வடக்கு பொலிவியா போன்ற நாடுகளில் உள்ளது.


உலகில் உள்ள குரங்கு வகைகளிலேயே மிகவும் சிறிய வகைக் குரங்கு இதுதான். 14 முதல் 16 செ. மீ அளவு வரைதான் வளரும், (வாலுடன் சேர்த்தால் 15 முதல் 20 செ. மீ) அதற்கு மேல் வளராது.
ஆண் குரங்குகின் எடை 140 கிராம், பெண் குரங்கின் எடை 120 கிராம். பாக்கெட் குரங்கு, விரல் குரங்கு என்று இதனை செல்லமாக அழைக்கிறார்கள். இவற்றின் ஆயுள் 11 முதல் 12 ஆண்டுகள்.

அறிஞர்கள் வாழ்வில்


பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்தபோது சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பல ஊர்களில் கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள்.


நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப் போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்காக வைத்துக்கொண்டார்.
கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்தத் தொண்டரைக் காமராஜர் அழைத்து, “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார்.
அந்தத் தொண்டர் அதிர்ந்து போனார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டு விட்டாரே”என்று மனம் வருந்தினார்.
“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்தத் துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்...இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்கிற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக்கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.
காமராஜரின் ஏழைக்கு உதவிட வேண்டும் என்கிற அந்தக் கருத்தைக் கேட்ட தொண்டரும் தன்னுடைய செயலுக்காக வருந்தினார்.

சேவலிடம் ஏமாந்த நரி


காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டுவாசியானதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது. நல்ல பலசாலியாகவும் இருந்தது. அது “கொக்கரக்கோ” என்று கத்தினால் காடே அதிரும்.
அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது “எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று எண்ணியவாறு ஆசையுடன் சேவலைப் பார்க்கும். சேவலுக்கு நரியின் பார்வை புரிந்தது. அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது.

சேவல் அந்த மரத்தை விட்டு இறங்காத காரணத்தினால், தன் எண்ணத்தை ஈடேற்ற முடியாமல் தவித்துப் போயிற்று நரி.
இந்தச் சேவலைத் தந்திரத்தால் தான் வளைத்துப் போட்டு, தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் நரி அவ்வழியே வரும்போது அது மரத்தின் கீழ் அமர்ந்து சேவலிடம் பேச ஆரம்பித்தது.
“அழகிய சேவலே! உனக்கு விஷயமே தெரியாதா? இன்று நம்முடைய சிங்கராஜா ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் பகை கிடையாது. இது சமாதான ஆண்டு. எந்த விலங்குக்கும், மற்ற விலங்கால் பிரச்சினை வரக் கூடாது. பிரச்சினை வந்தால் கடும் தண்டனை தரப்படும். எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. அவை காட்டோர அருவிப் பகுதியில் நிலா வெளிச்சத்தில் பாட்டுப் பாடி ஆடிக்கொண்டிருக்கின்றன. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடி சேர்த்துக்கொண்டன. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது நீ என் ஞாபகத்துக்கு வந்தாய், வா நாமிருவரும் சேர்ந்து அருவிக் கரைக்குப் போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து சந்தோசமாக இருக்கலாம்” என்றது.
நரி பேசப் பேச சேவல் அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த கிளைக்குச் சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த நரிக்கு எரிச்சலாக இருந்தது.
“நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் மரக்கிளைக்கு மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே” என்றது.
“நரியாரே, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால் அதைவிட முக்கியமான சமாச்சாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்றது.
“அதை விட முக்கியமான சமாச்சாரமா? அது என்ன?” என்றது நரி.
“வெகு தூரத்தில் இரண்டு உருவங்கள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன!”என்றது சேவல்.
“அவை எப்படி இருக்கின்றன?” என்று பயத்துடன் கேட்டது நரி.
“இரண்டும் நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் கண்கள் பளபளவென ஜொலிக்கின்றன. அங்கும். இங்கும் பார்த்து எதையோ மூக்கால் முகர்கின்றன. அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. உங்களை விட உயரமாக இருக்கின்றன. ஆ....இப்போது கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன. ஒருவேளை அவை ஓநாய்களோ,” என்றது சேவல்.
“சரியாப் போச்சு, அவை ஓநாய்களில்லை. வேட்டை நாய்கள், பார்த்தால் கடித்துக் குதறி விடும்” என்று கூறியவாறு ஓட்டமெடுத்தது நரி.
நரி ஓடுவதை பார்த்து சேவல் சிரித்தது மகிழ்ச்சியுடன்.

சனி, 22 செப்டம்பர், 2012

சமூகத்தின் நன்மை கருதிய தீர்மானத்திற்கே முஸ்லிம் காங்கிரஸ் முன்னுரிமை அளிக்க வேண்டும்

தலைமைத்துவத்திற்கு உலமாக்கள் ஆலோசனை

(ஏ.ஆர்.ஏ. பரீல்)

அரசுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தி எத் தரப்புடன் இணைந்தால் சமூகம் அதிகூடிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அத்தரப்புடன் இணைந்து கிழக்கு மாகாணசபை ஆட்சிக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உலமாக்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை ஆட்சியில் எந்தத் தரப்பிற்கு ஆதரவு வழங்குவது என்று நேற்றும் நேற்று முன்தினமும் தொடராக ஆலோசனை நடாத்தியது.

நேற்று முன்தினம் காலி முகத்திடல் ஹோட்டலில்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற 7 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் உலமாக்கள் குழுவொன்றும் கலந்து கொண்டது.

உலமாக்கள் குழுவிற்கு தலைமை வகித்த அம்பாறை மாவட்ட  ஜம்மியத்துல் உலமா சபைத்  தலைவர்  மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா (மதனி) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ‘விடிவெள்ளி’க்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

‘முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கட்சியாகும். தேர்தலில் தெரிவு செயப்பட்டவர்கள் கட்சியின் உண்மையான விசுவாசிகளாக இருக்க வேண்டும்.  சமூகத்தின் நலன் கருதி செயற்பட வேண்டும். பிரிந்து போவதனையோ பிளவுபடுத்துவதையோ அனுமதிக்க முடியாது.

கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும். மார்க்க அடிப்படையில் மசூராக்கள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெறப்பட்டு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும். சமூகத்தினதும்  கட்சியினதும் நலனே  இலக்காக இருக்க வேண்டம். சுய நலன்களுக்காக பிரிந்து போகக் கூடாது. 

இதனை  உறுதி செது கொள்வதற்காகவே நீங்கள் பைஅத் செதிருக்கிறீர்கள் என்று உலமாக்கள் அறிவுரை வழங்கினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபையில் வெற்றியீட்டியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் கட்சியைப் பாதுகாப்பதாகவும் பிளவுபடாமல் பிரிந்து விடாமல் செயற்படுவதாகவம் உலமாக்கள் முன்னிலையில் உறுதிமொழி வழங்கினார்கள்.

கலந்துரையாடலில் உலமாக்களான மௌலவி ஐ.எல்.எம். ஹாஷிம் (பாலமுனை), மௌலவி ஏ. அபூ உபைதா (மருதமுனை), மௌலவி (ஏ.எல். நாகூர்கனி (நற்பிட்டிமுனை),  மௌலவி எம்.எல்.எம்.பஷீர் (சம்மாந்துறை), மௌலவி எம்.எல். பைசல் (ஒலுவில்), மௌலவி தௌபீக் (சம்மாந்துறை)  ஆகியோர்  கலந்து கொண்டனர்.

அரசுடனும் கூட்டமைப்புடனும் ஹக்கீம் இன்று பேச்சுவார்த்தை

இரு தரப்பினதும் உத்தரவாதங்களை பரிசீலித்த பின்னரே இறுதி முடிவு

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவை எட்டுவதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக பல மணி நேரம் கட்சியின் பாராளுமன்றக் குழுவும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்த போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இருப்பினும் ஆட்சியமைப்பதற்கான அழைப்பை விடுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் இரு தரப்புகளும் வழங்கும் உத்தரவாதங்களை பரிசீலித்த பின்னரே இறுதி முடிவை எட்டுவது எனவும் நேற்று நடைபெற்ற இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலிலும் நேற்று அமைச்சர் ரவூப் ஹக்கீமின்  வாசஸ்தலத்திலும்   இரு வேறு கூட்டங்கள் இடம்பெற்றன. 

இக் கூட்டங்கள் பல மணித்தியாலங்களாக  நீடித்தபோதிலும் உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. கட்சியின் தீர்மானத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் பெருந்திரளான ஆதரவாளர்கள் நேற்று ஹக்கீமின் வாசஸ்தலத்தின் முன்னால் குழுமியிருந்தனர். 

மாகாணசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மு.கா. யாருடன் இணைந்து ஆட்சியமைக்கும் என்பது தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

மு. காங்கிரஸ் கிழக்கில் தனித்துப் போட்டியிடுவது என்ற தீர்மானத்தை கட்சி எடுத்தபோதும் தேர்தலுக்குப் பின்னர் அரசை ஆதரிப்பது  தொடர்பில் முஸ்லிம்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கிழக்கில் ஆட்சியமைப்பதனையே அங்குள்ள முஸ்லிம்களும் ஏனையவர்களும் விரும்புகின்றனர்.

கிழக்கில் அரசுக்கெதிராக 400,000 வாக்குகள் உள்ளன. 200,000 வாக்குகளே அரசுக்கு அங்கு உள்ளது. இந்நிலையில் மு.கா. மக்கள் விருப்பை நிாரகரித்து வரலாற்றுத் துரோகம் ஒன்றை செயக்கூடாது.

கிழக்கில் தமிழ், முஸ்லிம் உறவினை பலப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முஸ்லிம் முதலமைச்சர் உள்ளிட்டவற்றை தருவதற்கு த.தே.கூ. தயாராகவுள்ள நிலையில் அச்சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக்கூடாது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்துக்காகவே தலைவர் அஷ்ரப் காத்திருந்தார்.  இன்று அதற்கான வாப்புக்கள் ஏற்பட்டுள்ளது.  அதனை சரியாக பயன்படுத்தி வாக்களித்த மக்களின் விருப்பத்தினை மு.கா. நிறைவேற்ற வேண்டும்.

எங்கு எத்தனை கூட்டங்களை வைத்து முடிவு எட்டப்பட்டாலும் அது மக்களின் விருப்பத்தினை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Blogroll