சனி, 22 செப்டம்பர், 2012

இலங்கையில் வதாஹ் கன்பர்


ஏ.ஆர்.ஏ.பரீல்
சிலோன் (இலங்கை) என்றால் உலகிலுள்ள எல்லோருக்கும் தேயிலை தான் நினைவுக்கு வருகின்றது. இலங்கை தேயிலையை தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இலங்கை கலை,கலாசார பண்பாடுகளுடன் கூடிய அழகிய நாடு என்பது அநேகருக்குத் தெரியாது என இரு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை க்கு வந்திருந்த அல்-ஜஸீராவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், மத்திய கிழக்கு ஷர்க் ஒன்றியத்தின் தலைவருமான வதாஹ் கன்பர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க் கிழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வதாஹ் கன்பருக்கு கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் வரவேற்புபசாரம் அளித்து கௌரவித்தது. மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரை நிகழ்த்துகையில்:

 இலங்கையில் 1000 வருடங்கள்  பழமைவாய்ந்த பள்ளிவாசல் ஒன்று இருப்பது குறித்து இங்கு வந்தபின்பே அறிந்து கொண்டேன். முஸ்லிம்கள் யெமனிலிருந்து வியாபார நோக்கமாக இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்து இறங்கிய பேருவளையிலேயே 1000 வருடங்கள் பழமை வாய்ந்த அப்ரார் பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. அவர்கள் அன்று வாள்களுடன் வரவில்லை அன்பின் செய்தியையே கொண்டு வந்தார்கள். அன்று அவர்கள் வந்த இலட்சியத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்.

இலங்கை முஸ்லிம்கள் தாம் சிறுபான்மையினர் என தம்மை வேறுபடுத்திக் கொள்ளக்கூடாது. தாம் பெரும்பான்மையினரில் ஒரு பகுதியென்றே கருதவேண்டும். இலங்கை முஸ்லிம்கள் தனி வழி செல்லாது தேசிய நீரோட்டத்தில் கலந்து செயற்படுவது அவசியமாகும். நீங்கள் இந்நாட்டின் பங்காளிகள் என்பதனை மனதிற்கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.

மத்திய கிழக்கில் அரபு வசந்தத்தின் பின் உருவாகியுள்ள புதிய சூழலின் நன்மைகளை இலங்கை பெற்றுக்கொள்ள வழி செய்யவேண்டும். அரபு நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் அதிகரிக்கப்படவேண்டும். முஸ்லிம் மீடியா போரம் அரபு நாடுகளிலுள்ள அமைப்புகளுடனான தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்ளவேண்டும். சமூக ஊடகவலையமைப்புகள் மற்றும் இணைய தளங்களினூடாக ஊடகப் பணிகளை மேற்கொள்ளுவதற்கு இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படவேண்டும். நாங்கள் மத்திய கிழக்கில் 500 பேரை ஒன்று சேர்த்து இவ்வாறு முழுமையான பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். என்றார். 

வதாஹ்கன்பரை முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நிகழ்வில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், கட்டார் அல்ஜஸீரா ஊடக வலையமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் இஹ்திஸாம் ஹிப்பதுல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 10 ஆம் திகதி காலை இலங்கை வந்து சேர்ந்த வதாஹ் கன்பரை தேசிய ஒற்றுமைக்கான பாக்கீர் மார்க்கார் நிலையத்தின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் தாஜ் ஹோட்டலில் வரவேற்றனர்.
 தேசிய ஒற்றுமைக்கான பார்க்கீர் மார்க்கார் நிலையம் கடந்த 10 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பார்க்கீர் மார்க்காரின் நினைவு தின நிகழ்விலும் வாதாஹ் கன்பர் கலந்து கொண்டார். கொழும்பு ஸ்ரீ சம்புத்த ஜயந்தி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நினைவு தின வைபவத்தில் அவர் ‘அரபுலக எழுச்சி ஓர் புதிய அரசியல் பரிமாணம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் :-

அரபு வசந்தம் என்பது மேற்கத்திய ஊடகங்களுக்கு வகுப்பு வாத யுத்தமாகும். ஆனால் உண்மை அது வல்ல. ‘அரபு வசந்தம்’ என்பது தற்போது அரபுலகில் நிகழ்ந்து வரும் ஒரு புரட்சியாகும். அரபுலகின் வரலாறு இவ் வசந்தத்திற்கு மிகவும் முக்கியமாகும். 
அரபுலகம் கண்டதெல்லாம் வெறும்  துரோகமும் நய வஞ்சகமுமே மிக மோசமான இன்னல்களையும் அவமானத்தையும் அரபுலகம்  அனுபவித்தது. அன்று சொந்த மக்களின் ஆலோசனைகளின்றியே காலனித்துவ சக்திகளால் இன்றைய மத்திய கிழக்கைப் பிரிக்கும் எல்லைக் கோடுகள் வரையப்பட்டு அப்பிராந்தியத்தின் வடிவம் நிர்ணயிக்கப்பட்டது. அத்திருட்டு செயலின் தாக்கம் தொடர்ந்தும் அந்தப் பகுதியை ஆட்டிப் படைத்தது. 
நவீன ஊடகத்தின் சமூக வலைப்பின்னல் வழியாக அரபுலக வாலிபர்கள் தமக்குள் ஏற்படுத்திய தொடர்புகளின் மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அரபு வசந்தத்தை நிர்மாணித்தனர். அரபு நாட்டு சர்வாதிகார வயோதிப ஆட்சியாளர்கள் இவ்வாலிப குழுக்களின் சக்தியை உணர்ந்திருக்கவில்லை. இவ்வாலிபர்கள் இணையம் மூலம் வீண் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாகவே வயோதிபர்கள் கருதினர். முடிவில் இணையத்தின் மகிமையையும் சக்தியையும் உணராதிருந்த அரபுலகின் சர்வாதிகார வயோதிபர்கள் தூக்கி எறியப்பட்டனர்.
1948 இல் பலஸ்தீனின் யூதர்களும், அரேபியர்களும் எல்லைப் பிரச்சினைக் காரணமாக முட்டி மோதிக் கொண்டனர். ஐ.நா. சபையின் நிலப் பிரிவு திட்டத்தின் கீழ் அதிக நிலங்கள் யூதர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. யூதர்கள் அகமகிழ்ந்தனர் என்றார். 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்ன, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்கள் திஸ்ஸ அத்தநாயக்க, கரு ஜயசூரிய, ஜயலத் ஜயவர்தன, ருவான் விஜேவர்தன, சஜித் பிரேமதாச, ஹர்ஷ டி சில்வா, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, பாக்கீர் மாக்கார் நிலையத்தின் போஷகர்களான முன்னாள் அமைச்சர் கருணாசேன கொடிதுவக்கு, பேராசிரியர் சந்திரசேகரன், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வதாஹ் கன்பர் கடந்த 11 ஆம் திகதி பேருவளை ஜாமிஆ நளீமியா கலா பீடத்திற்கும் விஜயம் செய்தார். அவரை ஜாமிஆ நளீமியா நிர்வாக சபைத் தலைவர் எம்.என்.எம். யாகூத், நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முகம்மத் ஆகியோர் உட்பட கலாபீட ஆசிரியர்களும் வரவேற்றனர். வதாஹ் கன்பர் இஸ்லாத்தின் முக்கியமான அம்சங்களும் சமகால உலகின்  முஸ்லிம் இளைஞர்களின் வகிபாகமும் எனும் தலைப்பில் உரையாற்றினார். நிகழ்வினை இஹ்திஸாம் ஹிப்பத்துல்லாஹ் ஏற்பாடு செய்திருந்தார்.

வதாஹ் கன்பர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பாக்கீர் மார்க்கார் நிலையமும் கொழும்பு தாஜ் @ஹாட்டலில்  ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்வில் பத்திரிகை ஆசிரியர்களும், பத்திரிகை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அங்கு அவர் நல்லாட்சியும் ஊடகங்களின் ஒழுக்கக் கோவையும் என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார். 

வதாஹ் கன்பர் அங்கு உரை நிகழ்த்துகையில் சிறந்த ஆட்சியொன்று ஒரு நாட்டில் நடைபெறுமென்றால் தகவல் அமைச்சொன்றின் தேவைப்பாடு இருக்காது. ஏனென்றால் சிறந்த ஆட்சியில் இரகசியங்கள் ஏதும் இருக்காது. ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடாது. ஊடகங்கள் உண்மையை வெளியிடுவதற்கு அனுமதியளிக்கவேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் தகவல் அமைச்சின் அவசியம் தேவைப்படாது.

ஊடகங்கள் அரசியல் தலைவர்களை ஹீரோக்களாக கணிக்கக்கூடாது. அரசியல் தலைவர்கள் மக்களின் மனங்களிலேயே ஹீரோக்களாக இடம்பிடிக்கவேண்டும். அப்போதே அவர்கள் பதவியில் இருக்க முடியும். மக்களால் பதவி கவிழ்க்கப்பட்ட லிபியத் தலைவர் கடாபி மற்றும் எகிப்திய தலைவர் ஹுஸ்னி முபாரக் இருவரையும் ஊடகங்களே ஹீரோக்களாகக் கருதியிருந்தன.  ஆனால் மக்கள் மனதில் அவர்கள் ஹீரோக்களாக இடம்பிடிக்கவில்லை என்றார். 

வதாஹ் கன்பர் ஜனாதிபதி ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடினார். அல்ஜஸீரா ஊடக வலையமைப்பின்  பணிகளைத் தெளிவுபடுத்தினார். இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகளையும் கேட்டறிந்தார். வதாஹ் கன்பர் கடந்த 12 ஆம் திகதி காலை தனது இருநாள் விஜயத்தினை பூர்த்தி செய்து கொண்டு நாடு திரும்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll