சனி, 22 செப்டம்பர், 2012

கிழக்கில் விஷம் கக்கும் முஸ்லிம் தலைமைகள்


கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பத்திரிகைகளில் வெளியாகும் தேர்தல் மேடைப் பேச்சுக்களை வாசிக்கும் போதும் அரசியல் பேட்டிகளை அவதானிக்கும் போதும் ஒருவரையொருவர் வெட்டி  வீழ்த்தும் பாணியில் சூடு பறக்கும் தொனியில் முஸ்லிம் தலைமைகள் ஒருவரையொருவர் விமர்ச்சிக்கின்ற போக்கை எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு  சமூக எழுச்சிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் அரசின் துணையோடு செயலாற்ற வேண்டிய இவர்களால்  இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா என்ற சந்தேகக் கேள்விகளை இன்று எமது சமூகம் எழுப்பிய வண்ணம் இருக்கின்றது.
கருகும்  மியன்மாரின் அவல நிலை கண்டு இலங்கை முஸ்லிம்கள் அவர்களின் எதிர்கால இருப்புக்கு உத்தரவாதம் கிடைக்குமா எனச் சிந்திக்க தலைப்பட்டு விட்டனர். அச்ச உணர்வோடு வாழ்கின்றனர். தம்புள்ளை, குருநாகல் என ஆரம்பித்து கிண்ணியா வரவேற்புக் கோபுரம் எனச் சென்று ராஜகிரிய, தெகிவளை என வியாபித்து முஸ்லிம்களுக்கெதிராக எச்சரிக்கைகள் மிரட்டல் மூலம் பயம் காட்டி எதிர்கால இலங்கை முஸ்லிம்களின் நல்வாழ்வுக்கு சவால் விடுக்கும் செயற்பாடுகள் நிறைந்து காணப்படும்  இன்றைய சூழலில் எமது தலைமைகள் பிரிந்து நின்று அரசியலில் ஈடுபட்டால் எமது சமூகம் உருப்படுமா? என மூக்கில் விரலை வைக்க வேண்டியுள்ளது. எங்களை நாங்களே சுய விசாரணை செது கொள்வது நல்லது. இவை அனைத்தும் பத்திரிகைச் செதிகளைப் படிக்கும் போது எழும் உணர்வலைகள் எனலாம்.
முஸ்லிம் சமூகத்தின் தேவைகளோ அனந்தம்.  வீடில்லா பிரச்சினை தொழிலில்லா பிரச்சினை, கல்விப் பிரச்சினை, வர்த்தகத்தில் திட்டமிட்ட சதிகள் என எமது அவல நிலை தொடர்கின்றது. இவைகளுக்கு விடை காண  ஏதாவது திட்டங்கள் இவர்களிடம் இருக்கின்றதா? தீர்க்க வேண்டும் என்ற ஆவலாவது இவர்களிடம் இருக்கின்றதா? தலைமைகள் பிரிந்து விட்டால் நிச்சயமாக பொது மக்களின் ஆசை அபிலாசைகள் எதிர்பார்ப்புகள் பின் தள்ளப்படுவதுண்டு இதில் மாற்றுக் கருத்துக்கிடையாது.
முஸ்லிம்களின்  கல்வியைப் பாருங்கள் நாடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தாலும் தரமான ஒரு முஸ்லிம் பாடசாலையைக் கண்டு கொள்ள முடியுமா? முஸ்லிம்களுக்கு கை கொடுக்க யார் முன் வருவார்கள்? எமது குறைகளை யாரிடம் சோல்லி முறையிடுவது? முஸ்லிம்களின் தேவைகளை எமது தலைமைகள்  கண்டு கொள்வதில்லை. இவர்களுக்கிடையே தலைமைத்துவப் போட்டி கழுத்தறுப்புக்கள் தொடர்கின்றன. புனித ரமழானில் கிழக்கில் நடந்தேறியதென்ன? யாராவது சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி என ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கிழக்கில் சில முஸ்லிம் நகர்கள் அரசியல் காரணமாக அல்லோல கல்லோலப்பட்டன. பத்திரிகைகளில் படத்தோடு பார்க்க முடிந்தது. ரமழானின்  புனிதம் எங்கே போனது? அக்கரைப்பற்றில் நடந்தவை எம்மை தலைகுனிய வைக்கின்றது. கிழக்கில் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்தும் அரசியல் மேடைப் பேச்சுக்கள் ஏனைய சமூகங்கள் சந்தோஷப்படும் வண்ணம் முஸ்லிம் தலைமைகள் பிரிந்து விட்டமை கவலையளிக்கின்றது. கிழக்கில் மட்டுமல்ல வெளியிலும் தலைமைக்குப் போட்டி நிலவுகின்றது. ஹஜ் கமிட்டியைப் பாருங்கள் நீதி கேட்டு படி ஏறி விட்டார்கள்.

சாந்தியையும் சமாதானத்தையும் உலகிற்கு வாரிவழங்கும் மார்க்கம் இஸ்லாம் என்கிறோம். அதனை மார்க்கமாக ஏற்று முஸ்லிமாக வாழ்ந்து வரும் எமக்கு ஒரு தலைமை இருக்கின்றதா? தலைமைக்குப் போட்டி? விட்டுக் கொடுப்போடு செயற்பட்டு ஒரு தலைமையின் கீழ் சமூகத்துக்கு வழிகாட்ட இவர்களால் முடியவில்லை. ஏன்? அரசியல் தொழிலாகிவிட்டதன்  காரணமாக நேர்மையாக நடப்பது சாத்தியமில்லை என்ற மெரில்டனின் கருத்தே நினைவுக்கு வருகின்றது. ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபி(ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லையா? இரண்டு வருடங்களில் மக்காவை வெற்றி கொள்ளவில்லையா? முஸ்லிம் தலைமைகளே சிந்தித்து பாருங்கள் இப்படியே சென்றால் எமது எதிர்கால இருப்புக்கு உத்தரவாதம் இல்லாது போ விடும்.
கருகும் மியன்மாரும் காத்திருக்கும் இலங்கையும் என்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் கருத்தை சஞ்சிகையொன்றில் வாசித்தமை நினைவுக்கு வருகின்றது. அதில் பட்டியல் இடப்பட்டுள்ள முஸ்லிம் எதிர்ப்புச் செதிகள் கவலையளிக்கின்றன. முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஓர் பாரிய அழிவின் ஒரு சில தீப்பொறிகள் என அவைகளைக் கருதலாம் கைகள் எழுத மறுக்கின்றன விழிகள் குளமாகின்றன.

முஸ்லிம் தலைமைகளே! அல்லாஹ்வுக்காக ஒன்றுபடுங்கள் சமூக நலனுக்காக செயல்படுங்கள் அரசியலை வியாபாரமாக்கி விடாதீர்கள் கொட்டும் விஷத்தை நிறுத்தி விட்டு பகைமையை மறந்து சமூகத்தை எண்ணிப் பாருங்கள். நாளுக்கு நாள் அநாதரவாகிக் கொண்டிருக்கும் உரிமைகளோடு வாழத் துடிக்கும் உங்கள் சமூகத்தின்  அவலநிலையை எண்ணிப் பாருங்கள். நிதானத்தோடு பொறுப்பாகச் செயற்படுங்கள் மறுமை அதன் அறுவடை நிலமாக அமையட்டும்.
-திக்குவல்லை இனாயாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll