சனி, 22 செப்டம்பர், 2012

சமூகத்தின் நன்மை கருதிய தீர்மானத்திற்கே முஸ்லிம் காங்கிரஸ் முன்னுரிமை அளிக்க வேண்டும்

தலைமைத்துவத்திற்கு உலமாக்கள் ஆலோசனை

(ஏ.ஆர்.ஏ. பரீல்)

அரசுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தி எத் தரப்புடன் இணைந்தால் சமூகம் அதிகூடிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அத்தரப்புடன் இணைந்து கிழக்கு மாகாணசபை ஆட்சிக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உலமாக்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை ஆட்சியில் எந்தத் தரப்பிற்கு ஆதரவு வழங்குவது என்று நேற்றும் நேற்று முன்தினமும் தொடராக ஆலோசனை நடாத்தியது.

நேற்று முன்தினம் காலி முகத்திடல் ஹோட்டலில்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற 7 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் உலமாக்கள் குழுவொன்றும் கலந்து கொண்டது.

உலமாக்கள் குழுவிற்கு தலைமை வகித்த அம்பாறை மாவட்ட  ஜம்மியத்துல் உலமா சபைத்  தலைவர்  மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா (மதனி) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ‘விடிவெள்ளி’க்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

‘முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கட்சியாகும். தேர்தலில் தெரிவு செயப்பட்டவர்கள் கட்சியின் உண்மையான விசுவாசிகளாக இருக்க வேண்டும்.  சமூகத்தின் நலன் கருதி செயற்பட வேண்டும். பிரிந்து போவதனையோ பிளவுபடுத்துவதையோ அனுமதிக்க முடியாது.

கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும். மார்க்க அடிப்படையில் மசூராக்கள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெறப்பட்டு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும். சமூகத்தினதும்  கட்சியினதும் நலனே  இலக்காக இருக்க வேண்டம். சுய நலன்களுக்காக பிரிந்து போகக் கூடாது. 

இதனை  உறுதி செது கொள்வதற்காகவே நீங்கள் பைஅத் செதிருக்கிறீர்கள் என்று உலமாக்கள் அறிவுரை வழங்கினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபையில் வெற்றியீட்டியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் கட்சியைப் பாதுகாப்பதாகவும் பிளவுபடாமல் பிரிந்து விடாமல் செயற்படுவதாகவம் உலமாக்கள் முன்னிலையில் உறுதிமொழி வழங்கினார்கள்.

கலந்துரையாடலில் உலமாக்களான மௌலவி ஐ.எல்.எம். ஹாஷிம் (பாலமுனை), மௌலவி ஏ. அபூ உபைதா (மருதமுனை), மௌலவி (ஏ.எல். நாகூர்கனி (நற்பிட்டிமுனை),  மௌலவி எம்.எல்.எம்.பஷீர் (சம்மாந்துறை), மௌலவி எம்.எல். பைசல் (ஒலுவில்), மௌலவி தௌபீக் (சம்மாந்துறை)  ஆகியோர்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll