சனி, 17 நவம்பர், 2012

அறிஞர்கள் வாழ்வில்


பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்தபோது சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பல ஊர்களில் கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள்.


நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப் போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்காக வைத்துக்கொண்டார்.
கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்தத் தொண்டரைக் காமராஜர் அழைத்து, “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார்.
அந்தத் தொண்டர் அதிர்ந்து போனார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டு விட்டாரே”என்று மனம் வருந்தினார்.
“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்தத் துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்...இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்கிற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக்கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.
காமராஜரின் ஏழைக்கு உதவிட வேண்டும் என்கிற அந்தக் கருத்தைக் கேட்ட தொண்டரும் தன்னுடைய செயலுக்காக வருந்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll